அறிவகங்கள் சனாதிபதியின் உயர் மனப்பான்மைக்கு அத்தாட்சி: அமைச்சர் சியம்பலாபிட்டிய
 
SinhalaSriLankaTamilSriLanka

அறிவகங்கள் சனாதிபதியின் உயர் மனப்பான்மைக்கு அத்தாட்சி: அமைச்சர் சியம்பலாபிட்டிய

சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுரையின் கீழ் வட மாகாணத்தில் 41 புதிய "நெனசல" அறிவகங்களை அதாவது கிராமப்புற தொலைத்தொடர்புமையங்களை நிறுவுவதற்கு இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக "ICTA" தகுதியுள்ள சமூகம் சார்ந்த அமைப்புகளிடமிருந்து விண்ணப்பம் கோரியிருந்தது. இதன்படி 41 அமைப்புகள் அறிவகங்களை நிறுவுவதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இவை குறிப்பிட்ட அமைப்புகளின் பொறுப்பில் "ICTA" வின் மேற்பார்வையின் கீழ் செயல்படுபவையாகும். 

இந் 41 புதிய ‘நெனசல’ அறிவகங்களுள் முதல் 21 புதிய அறிவகங்களை (ஞான மையங்கள்) இவ்வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை (16 மற்றும் 17) தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிற்றிய அங்குராரப்பணம் செய்துவைத்தார். 

இவ் அங்குரார்பணங்களின்போது உரையாற்றிய கௌரவ தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிற்றிய பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: “இவ் ‘நெனசல’ அறிவகங்கள் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சாதிமத பேதமின்றி சகல இலங்கைவாசிகளினதும் கணினியறிவு முன்னேற்றத்திலும் அதன் மூலம் சகலரினதும் வசதியான வாழ்க்கையிலும் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை எடுத்துக்காட்டுகின்றன. அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாட்டின் மாணவ மாணவிகள்  எங்கு பிறந்தவர்களாயிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், எந்த மதத்தைத் தழுவினாலும் சகல இலங்கை சிறார்களும் இலங்கையென்னும் தம் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள். ஆகையால் அவர்கள் எல்லோரதும் அறிவு மற்றும் திறமை கூடிய அளவு உச்ச கட்டத்தை எய்துவதை சனாதிபதி அவர்கள் விரும்புகிறார”. என்றார். 

இவ் அங்குரார்ப்பண வைபவங்களில் கௌரவ அமைச்சருடன் "ICTA" வின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர, "ICTA" வின் மூலோபாய தொடர்பாடல்கள் மற்றும் ஊடக பணிப்பாளர் அதுல புஷ்பகுமார மற்றும் "ICTA" வின் தகவல் உட்கட்டமைப்பு செயற்திட்ட முகாமையாளர் கவஸ்கார் சுப்ரமணியம் உட்பட்ட "ICTA" உத்தியோகத்தர்கத்தர்கள் தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினர்.

அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட 21 அறிவகங்களினதும் பொறுப்பமைப்புகள் தங்கள் மனமார்ந்த நன்றியை கௌவர சனாதிபதியுவர்களுட்பட்ட அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டன. 

இப் புதிய ‘நெனசல’ அறிவகங்களை நிறுவுவதின் நோக்கம் நாட்டில் சமாதானம் உண்டாகி பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் கூடிய அளவு மக்களுக்குத்  தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதென "ICTA" வின் தலைவர், பேராசிரியர் பீ. டப்ளிவ். ஆபாசிங்ஹ கூறினார். 

இப்புதிய "நெனசல" அறிவகங்களிலுள்ள வசதிகளுள் "ஸ்கைப்" மற்றும் "இ-சேவைகளைப்" பயன்படுத்தும் வசதிகளும் "ஸ்கேனிங்" செய்தல், போட்டோ பிரதி செய்தல், சுழல் பிணைப்பு, "லேமினேட்" செய்தல் ஆகிய வசதிகளும் அடங்கும். அத்துடன் தற்போதைய புதிய உலகில் இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் உகந்த கணினி கற்கைநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இப் புதிய 41 ‘நெனசல’ அறிவகங்களும் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமைப்பக்கப்பட்ட பின்னர் முழு வட மாகாணத்திலுமுள்ள முழு "நெனசல" அறிவகங்களின் எண்ணிக்கை 59 ஆக இருக்குமென "ICTA" கூறுகிறது.

இம் முழு "நெனசல" அறிவக எண்ணக்கரு மக்களுக்கு, சிறப்பாக மிகத் தூரத்திலுள்ள கிராமப்புற மக்களுக்குத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கூடிய அளவு பெற்றுக்கொடுப்பதற்காக சனாதிபதியினால் சிந்திக்கப்பட்ட எண்ணக்கருவாகும்.

தற்போது நாடுபூராக 720 ‘நெனசல’அறிவகங்கள் உள்ளன.

Add commentPoorBest 
Notices :

Nenasala Search
Contents of this site is licensed under a Creative Commons
Attribution-Noncommercial-Share Alike 3.0 License.